Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 28 நவம்பர், 2012

விளக்கெரியும் பொழுது


எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா 
நள்ளிரவுகளின் காலத்தில்
இருண்ட தேசத்தில்
சூரியனுக்காய் காத்திருக்க
சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க 
கைகளால் மூட முடியாத 
மழை இடியோடு பெய்கிறது.

வீழும் பொழுது அழுது
மீளும் பொழுது தொழுது
கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில்
தாய்மார்களின் அடி வயிறுகளில் 
கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன.

வீட்டு மூலையில் விளக்கெரியும் 
கார்த்திகை மாலைப் பொழுதில்
விளக்குகளை தூக்கி வந்து
மழையில் நீர் சொட்டும்
தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் 
உங்கள் முகங்கள் கண்போம்

மூட முடியா மழை
கொல்ல முடியா மரங்களில் பெய்ய
அழியா முகங்கள் மனங்களில் தெரியும்
அணைக்க முடியா விளக்குகள் 
தேசத்தை நிரப்பியெரியும் அப்பொழுது.

*    *    * 

தீபச்செல்வன்

நன்றி - வானவில், தீராநதி ஜனவரி 2013

சனி, 17 நவம்பர், 2012

குழந்தைகள் பலிவாங்கப்படுகிற நகரம்



இங்கும் ஒரு தாயின் அழுகைதான்
நகரத்தை உலுப்புகிறது
குழந்தைகள்தான்
பலியிடப்பட்டு அடுக்கப்படுகின்றனர்.

பேரீட்சைமரங்களின் கீழே
பாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை
தேடுகின்றதை நான் கண்டேன்.

எனது அம்மாவே நீ எங்கும்
குருதி சிந்துகிறாய்
நமக்காய் குழிகளைக்கூட
வழங்க பிடிக்காத அதிகாரத்திடம்
குழந்தகைள் திரிகிற
நகரம் பலியிடப்படுகிறது.

காஸா எல்லைகளில்
இலங்கைப்படைகள் மோத வருகின்றன
கிளிநொச்சியை இஸ்ரேல்படைகள்
முற்றுகையிடுகின்றன.

குழந்தைகள் என்ன செய்தார்கள்?

நமது குழிகளில் கிடக்கிற
குழந்தைகள் அங்கு அடுக்கப்பட்டிருக்கிறார்கள்
மேலும் மேலுமாய்
சனங்கள் தோற்றுப்போக
அதிகாரத்தை கடக்க இயலாதிருக்கிறது?

அந்த நகரமும்
எரிந்துகொண்டுதான் இருக்கிறது
குழந்தைகள்தான் உலகத்திடம்
பலிவாங்கப்படுகிறார்கள்
தாய்கள்தான் விலைகொடுக்கிறார்கள்.

சிதைந்த சுவர்களினிடையில்
இன்னும் நுழைய
காத்திருக்கும் விமானம்
எனக்கு மேலால் அலைந்து திரிகிறது.

விழப்போகிற குண்டுகளிடமிருந்து
தப்புவதற்கு அலைகிற நம்மைபோலான சனங்களின்
குழியிலிடப்படுகிற நகரத்தில்
நானும் நசிந்து கிடக்க
காயங்களால் நீ அழுகிறாய்.

பாலஸ்தீனக் குழந்தைகளை
பலியிட அலைகிற
இலங்கை இராணுவத்தளபதி
வழிநடத்துவிக்கிற
காஸா எல்லையில் ராங்கிகள் முன்நகருகின்றன.

நகரத்துள் படைகள்
நுழைந்து குழந்தைகளை தேடுகிறபோது
நமது நகரத்தின்
அதே அழுகை ஒலி கேட்கிறது.

நெருப்புப்பிடித்து எரிகிற நகரத்தில்
அதன் புகையிடையில் நமது முகங்கள்
கிடந்து கறுப்பாகின்றன.

விமானங்கள் நகரத்தை
முழுமையாய் தின்று களிக்க
சாம்பலில் பிறண்டு அழுகிற தாயிடம்
நமது நகரத்தின் அதே
குருதிச்சொற்கள்தான் இருக்கின்றன.

01.01.2009

தீபச்செல்வன்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அகதியின் பள்ளிக்கூடம்


அகதிமுகாமாக்கப்பட்ட பள்ளியின்
கதிரை மேசைகள் அள்ளியேற்றப்பட்ட
ஒருநாள் புத்தகங்கள் தொலைந்துபோயின
யாரும் திரும்பாத காலத்தில்
போர்க்களத்தில் நிற்கையில்
காயங்கள் மிகுந்த பள்ளியின் மணியை அசைத்திருப்பாயா?
நொந்த உள்ளத்தோடு கிழிந்த சீருடைகளுடன்
நான் அகதியான பொழுது
நிமிர்ந்திருந்த நம்; பள்ளியும் அகதியானது
ரொட்டிகளை பரிசளிக்கும் பசியாறும் கதைகளை
படித்த மரநிழலின் நினைவுகளை பொழியும்
சேலைகள் கட்டப்பட்ட
மரங்களாலான வீடுகளில்
என்னிடம் புத்தகங்கள் இருக்கவில்லை
அகதி முத்திரை குத்தப்பட்ட பள்ளிக்கு
உன்னைப்போலவே எந்தத் தோழர்களும் திரும்பவில்லை
யாரும் திரும்பாத வகுப்பறையில்
பாடல்கள் ஒலிக்கவேயில்லை
பேரீட்சைப் பழங்களில்லை
ஒட்டகங்களில்லை
எண்ணெய் கிணறுகளில்லை
சிறுவர்கள் சாகடிக்கப்படும் யுகத்தில்
ஒரு பாலஸ்தீனச் சிறுவனைப்போல
நான் ரொட்டிக்கு அலைந்தேன்
இறுதிவரை
கிழிந்த என் அகதிப் புத்தகப் பையிற்குள்
உனக்காக சில ரொட்டித் துண்டுகளிருந்தன.

தீபச்செல்வன்

*** 
நன்றி - மலைகள் இணைய இதழ்

திங்கள், 3 செப்டம்பர், 2012

பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?

தீபச்செல்வன்
     
மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட
உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன
நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது?
என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே
தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன
நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை
வரலாற்றில் பரப்பிச் செல்லும்
பாலியாறு என்ன தவறிழைத்தது?

நண்பனே நீ கண்ட கரையினில் பெண்கள் யாருமில்லை
வீழ்த்தும் கைகளை மீறி நணல்கள்
எழும்பிக் கொண்டிருக்கின்றன
மீன்கள் வெளியில் வருவதுமில்லை துள்ளுவதுமில்லை
யாருடைய கால்த்தடங்களுமில்லாத
பாலி ஆற்றங்கரை இருண்டு கிடக்கிறது
ஆற்றங்கரை மரங்கள் சலசலத்து
மண்ணின் கவிதைகளை பாடிக் கொண்டேயிருக்கின்றன.

குருதியை நிலத்திலிருந்து துடைத்து ஆற்றில் எறிந்திருக்கிறார்கள்
பாலி ஆறு நெளிந்தபடி கடலைத் தேடுகிறது
உடல் பரிசோதிக்கப்பட்டு
அனுமதிபெறப்பட்டு
கால் நனைத்து முகம் நனைக்கையில்
நம்மோடு இந்த ஆறும் அடிமையாயிருந்தது.

மருது மரங்கள் துயர்க்கோலமாய்
வளர்ந்து கிளைகளை வீசியிருக்கின்றன
யாரும் உள் நுழைய முடியாதபடியிருக்க
ஆறு தனித்து துயரோடு நீண்டு செல்கிறது.

பச்சை சமையல் பாத்திரங்கள் கழுவப்படும்
ஆறாய் அடங்கிக் கிடக்கிறது
துப்பாக்கிகளின் நிழல் விழுந்து அடக்கி
நீரோட்டத்தை குழப்பும் ஆறாய்க்கிடக்கிறது
பச்சை உடைகளும்
பச்சை சுவர்களும்
பச்சை முகாங்களும் பச்சை காவலரண்களும்
மூடியிருக்க ஆற்றங்கரையினில் பறக்கின்றன
ஆற்றில் துவைக்கப்பட்ட பச்சை உடைகள்.

ஒட்ட முடியாத பச்சைகள் மதிக்கின்றன
செழித்து நமது வரலாறு பரவிப் பாயும் ஆற்றின்
வலிமையையும் நீட்சியையும்
நாம் மீண்டும் பெறுவோமா?
மீண்டும் நாம் நீந்தி மூழ்க முடியுமா?
பாலி ஆற்றுப் பக்கமாக தாகத்தோடு
சில குழந்தைகள் தண்ணீர் கோப்பைகளை
இறுகப்பிடித்து குடித்துக் கொண்டிருந்தனர்.

அசையாத மணிகளும் யாருமற்ற பல வீடுகளும்
தயங்கி விளையும் பயிர்களும்
துரத்தப்பட்ட மனிதர்களைத்தான் தேடுகின்றன.

நீ வருவாயா உன் கவிதைகள் விளைந்த
பாலியாற்றில் நீந்திச் செல்ல?
மூட முடியாது விரியும்
தடுக்க முடியாது நீளும் பாலியாறு
இன்னும் மெல்ல மெல்லவாக
நகர்ந்து கொண்டுதானிருக்கிறது எனினும்
பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?

பின்குறிப்பு : 

'பாலியாறு நகர்கிறது' என்பது ஈழக் கவிஞர் ஜெயபாலன் 1968இல் எழுதிய அவருடைய முதல் கவிதை. இக்கவிதைவன்னியில் மல்லாவியில் உள்ள பாலியாற்றை பற்றியது. ஜெயபாலன் வன்னியில் மல்லாவியில் வாழ்ந்து தற்பொழுது புலம்பெயர்ந்து வாழ்கிறார். வன்னியின் வளத்திலும் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறும் பாலியாற்றை தற்பொழுது இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இராணுவத்தின் வசம் வீழ்ந்துள்ள பாலியாற்றுக்கு 2011இல் சென்ற பொழுது ஜெயபாலனை விழித்து எழுதியது

-பூவரசி 2012 ஜனவரி

சனி, 25 ஆகஸ்ட், 2012

மணல் வீடு

தீபச்செல்வன்

குழந்தைகள் வீடுகளை மறந்துபோனார்கள்
மணலில் பிறந்து விளையாடி
உறங்கிக் கிடக்கையில் கனவில்
நமது தேசத்தைப் பற்றி
பேசிக்கொள்கிறார்கள்
பெரும் மழையும்
கொடும் புயலும் அடித்த அழிவுக்காலத்தில்
நமது தேசம் அழிந்து போனது
குழந்தைகள் மணலில் வரைந்த
கதைகள் கொல்லப்பட்டன
அழிக்கப்பட்ட தேசத்தின்
குழந்தைகளின் கைகளுக்குள்
உதிராத மணல்வீடுகள்
இறுகிக் கிடக்கின்றன
அழிவை கட்டி எழுப்பிய தேசத்தில்
இந்தக் குழந்தைகளுக்கு எதைக்காட்டுவது?
பாதிச் சூரியனை
தலையில்லாத மரங்களை
கிடங்குகள் விழுந்து சிதைந்த நிலத்தை
பொம்மைகள் இறந்து கிடக்கும் வெளியை
பார்க்க ஏன் இவர்கள் இங்கு பிறந்தார்கள்?
தாங்கள் வாழ விரும்பும் தேசத்தை
மணலில் வரைந்திருக்கிறார்கள்.

நன்றி - மல்லிகை ஆண்டு மலர்

நினைவை கொல்லும் மிருகம்

தீபச்செல்வன்

நினைவைக் கொல்லும் மிருகம்
ஓரிரவில் பெருநகரைத் தின்று முடித்தது
அந்த மிருகத்தின் வாயில்
நினைவுகள் கொல்லப்பட்டு விழுங்கப்படுவதை
நாம் பார்த்துக் கொண்டேயிருந்தோம்
கனவை ஊடுருவிச் சென்று
மனதின் ஓரங்களில் சொருகப்பட்டு
கிடந்த நினைவுகளை எல்லாம்
தின்று விடுகிறது
கதைகள் எழுதப்பட்ட கற்களையும்
குழந்தை சித்திரங்களை வரைந்த சுவர்களையும்
தின்று கொண்டே
நமது மூதாதையர்களின் நினைவுகளை
எல்லாம் கொன்று போடுகிறது
அது மெல்ல மெல்ல
எல்லாவற்றையும் தின்றுகொண்டிருக்கிறது.
அது பசியெடுத்து அலறுகையில்
வார்ததைகள் நடுங்குகின்றன
தீன் தேடி வருகையில்
பூர்வீக கட்டிடங்கள் துடிக்கின்றன
கொடும் இரவில் நிலவைத் தின்ற மிருகம்
காலத்தை இழுத்துத் தின்கிறது.

நன்றி - மல்லிகை ஆண்டு மலர்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

யுத்தக்கல் சுமக்கும் சிறுவன்



தீபச்செல்வன்

ஒற்றைக்காலுடன் இழுத்துச் செல்லும்
சிறுவனுக்காய் திறக்கப்பட்டிருக்கிறது 
குண்டுகள் கொட்டப்பட்டு குழிகள் வீழ்ந்த நகரம்
செல்துளைத்த ஓட்டைக்குள்ளால்
பள்ளியிலிருந்து பார்த்த பொழுது
அழிவில் முழுநகரும் தோய்ந்திருந்தது
வலிக்காத கால்களுடன் நகரத்தில் திரிகையில்
ஒரு கையில் அம்மாவும் மறுகையில் அப்பாவும் இருந்தனர்
யாருமற்ற நகரில் ஊன்றுகோல்களை அவன் பிடித்திருந்தான்
கால்களற்ற சிறுவர்கள் தவழ்ந்தலையும் கனவு நகரில்
விளையாடும் குழந்தைகளில்லை
குழந்தைகளின் பூங்காவில் யுத்தக் கல் நிறுத்தப்பட்டிருந்தது
கால்கள் முதல் எல்லாவற்றையும் இழந்த
குழந்தைகளுக்கு தோல்வியை நினைவுபடுத்தும் யுத்தக்கல்
விழுந்தது காலற்ற சிறுவனின் முதுகுமீது.

நன்றி - கல்கி ஆகஸ்ட் 2012

புதன், 15 ஆகஸ்ட், 2012

பாடலற்ற நிலம்

தீபச்செல்வன்

நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள்
நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள்
நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள்
இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள்.

எங்களுக்கு ஒரு கனவு இருந்தது
எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது
எங்களுக்கு ஒரு நாடு இருந்தது
அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடியும் பாடலும் இருந்தது.

இன்று எங்கள் நகரத்தில் அந்நியக் கொடி பறக்கிறது
எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது
அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன
எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது.

அன்று எங்களுக்கு காவல் இருந்தது
இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம்
அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான்
இன்று எங்களுக்கு யாருமில்லை!

0

நன்றி - யூனியர் விகடன் 

காவல் இழந்த நிலம்

தீபச்செல்வன்


எதுவும் திரும்பியிராத காலத்தில்
தலைவனற்ற நிலத்தில்
காவலை விழுங்கும் அரண்களுக்குள்
சனங்கள் வசிக்கின்றனர்
இராணுவமுகாங்களுக்குள் வீடுகள் இருக்க
நிலமெங்கும் துப்பாக்கிகளின் நிழல் அடர்கிறது
புன்னகையிலிருந்து இரத்தம்வரை
எல்லாவற்றையும் உறிஞ்சும்
துப்பாக்கிகள் தெருக்களை ஆள்கின்றன
கிராமங்களில் நிரப்பட்ட யுத்த ஆயுதங்களும்
நகரங்களில் பறக்கும் இராணுவக் கொடிகளும்
சனங்களின் பூமியைக் கொல்கின்றன
கோயிலின் கோபுரங்களில் சப்பாத்துக்கள் ஏறியாட
ஆறுகளில் இராணுவ வண்டிகள் குதித்தெழும்ப
மரங்களில் இராணுவ உடைகள் போர்க்கப்பட்டிருக்க
எல்லாம் கொல்லப்பட்டன
சுற்றுலா தேசத்தின் காட்சிகள் விளம்பரமாக
கடதாசித் தலைவர்கள்
போர் தின்ற சனங்களின்
தலைகளுக்காய் அடிபடுகிறார்கள்
காவல் இழந்திருக்கும் நிலத்தில்
எல்லாம் பறிக்கப்பட்ட
எதுவும் இல்லாத ஒரு காலம் வந்தது
யாரும் கொல்லப்படக்கூடிய
எதுவும் பேசமுடியாத ஒரு காலம் வந்தது
இதற்கு முன்பு இந்த நிலத்தை
யாரோ காவல் செய்திருக்கிறார்கள்.
0

நன்றி - யூனியர் விகடன் 

கடத்தப்பட்டவர்களின் கண்கள்

தவிட்டுக் கலர் துணிகளால் 
கண்கள் இறுகக் கட்டப்பட்டவர்கள்
இரத்தப் பொருக்குப் படிந்து 
வெடில் மாறாத வழிகளில் 
பறவைகளின் ஒலியை கேட்டுத் திரிந்தனர்

பூக்களைப் போன்ற கண்கள்
நசுங்கி இறந்து போயின

என்னுடைய குழந்தைகளின் கண்களை
மூடிக் கட்டியவர்கள் 
இறுதியில் கண்களை பிடுங்கியெடுத்ததை
நான் காணமுடியாதிருந்தேன்

எனது கண்கள் ஒளிபொருந்தியவை 
காதல் ஊற்றெடுப்பவை என்று சொல்லிக் கொண்டே 
காதலி முத்தமிடுவாள்
அவளது விரல்களால் இமைகளை கோதி முத்திமிட்டபோது
கண்பூக்கள் செழித்துச் சடைத்தன

வெள்ளை நிற வண்டிகள்
மிருகங்களை போல கவ்விச் சென்று 
கண்களை மூடிக்கட்டும்பொழுது சூரியன் அணைந்தது

என்னுடைய கண்கள் உதிர்ந்துபோயின

வியர்த்து வெந்து பல நாட்களாய் கண்டுண்ட கண்கள்
எல்லா சித்திரவதைகளின் பின்பாயும்
அவிழ்த்து விடப்படுகையில்  
தேசம் இருண்டிருந்தது

நடுத்தெருக்களில் கண்களற்றுத் திரியும் 
மனிதர்களின் கண்கள் தனித்தலைந்தன
0

தீபச்செல்வன்

நன்றி - யூனியர் விகடன்

வியாழன், 12 ஏப்ரல், 2012

யாரோ ஒருவருடைய பிள்ளை


அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள்
அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது
சிதைமேட்டில் அழிக்க முடியாத
உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது
உடைத்தெறியப்படுவதும்
சிதைத்து புதைக்கப்படுவதும்
யாரோ ஒருவருடைய பிள்ளையை.

நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்?
எதிலும் நிரப்ப முடியாத
எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள்
உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா?
அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா?
பெற்றவர்கள் யாரோ எல்லாம்
இருதயத்திற்குள் அடித்தழுது
புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன.

யாரோ ஒருவருடைய பிள்ளை
ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது
நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில்
உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கிறார்கள்
புகை எழும்புகிறது
விளக்குகள் எரிகின்றன
எருக்கலை வேர்களைச் சுற்றி
யாரோ கூடியிருந்து பேசுகிறார்கள்.

முன்பொரு காலத்தில் இந்தச் சனங்கள் பிள்ளைகளை
பெற்று ஏதோ ஒன்றுக்காக அனுப்பியிருக்கிறார்கள்
எல்லாவற்றுக்காகவும் உதைத்து இடிக்கப்படும்
ஒவ்வொரு கல்லறையிலும்
நீள உறங்கிக் கொண்டிருந்த
யாரோ ஒருவருடைய பிள்ளை உறக்கமற்றலைகிறது.

தீபச்செல்வன்


நன்றி பூவரசி

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

நஞ்சுண்ட வீரம்



ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில்
சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில்
நஞ்சை ஆயுதமாக்க
உயிரை வேலியாகினர் போராளிகள்

வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை
அலங்கரிக்கும் கனவு வீரர்களின்
கருணையான முகத்தை
அன்புறைந்த வார்த்தைகளை
சனங்களுக்காய் களமாடும் வீரத்தை
கடக்க முடியா நஞ்சு

தன்னலமற்று நஞ்சருந்திய போராளிகளின்
கனவுகளால் பச்சை நிறமானது நிலம்.

பொறிக்குள் எல்லா வகையான
தந்திரங்களையும் முறியடிக்க
நெடுநேரம் போராடினர்
சூழ்ச்சியால் அபாயமாக்கப்பட்ட
நஞ்சு வலயத்தில்
காற்றுக்குத் தவித்தனர் குழந்தைகள்

மரணத்தின் நிழல் வீசியது எங்கும்

பறவைகள் முட்களுக்குள் மாட்டுண்டதுபோல்
குழந்தைகள் கிடங்குகளில் விழுந்தது போல்
குட்டிமான்கள் பொறிக்குள் சிக்குண்டதுபோல்
நஞ்சுப் பொறியில் அகப்பட்டது நிலம்

உயிர்கள் எரிய
காடு துடித்தது.

கனவு நிரம்பிய விழிகளோடிருந்த குழந்தைகளுக்கு
நஞ்சை பருக்கையில்
அதை தாமருந்தினர் போராளிகள்

கனவு மிகுந்த புன்னகையில்
இலட்சியம் நிறைந்த பார்வையில்
விடுதலையின் பேராவாவில்
வளர்த்தெடுக்கப்பட்ட வீரத்தில்
சூழ்ச்சியால் வீசப்பட்ட நஞ்சு
நனைத்தது உடலை மாத்திரமே
0

தீபச்செல்வன்

(2010 Edited 2018)

2010இல் எழுதப்பட்ட கவிதை 2018இல் மீண்டும் செம்மைப்படுத்தப்பட்டது

வெள்ளி, 23 மார்ச், 2012

கடைசிப் பாலகனின் இரத்தம்


மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில்
குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன
இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும்
மூடாத வாய்களில்
மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன
இரத்தத்தில் பிறந்து
இறுதிவரையில்  இரத்தம் காயாமல்
பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய
குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர
எனது நிலத்து பாலகர்கள் திரிகையில்
இலையான்கள் காயங்களை அரித்து
அவர்களைத் தின்று முடித்தன
எல்லோருடைய கண்களின் முன்பாகவும்
எனது தேசத்திற்கெதிரான போரில்
பாலகர்களை பலியிடும் பொழுது
தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில்
தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது
பெண்குறியிலிருந்து குழந்தைகள்வரை சிதைக்கப்பட
பாலகர்களின் பூமியின் வேர் கருகியது
போர் ஆயுதங்கள் மிகுந்த ரசனையொடு
பாலகர்களை சிதைத்துக் கொன்று தின்றன
ஏங்கும் குழந்தைகளின் கண்களை பிடுங்கி
வார்த்தைகளை அழித்து அவர்கள் இல்லாமல் செய்யப்பட்டனர்
பாலகர்களுக்கு எதிரான போரில்
வேருடன் அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது
பூமி வெளித்துப் போனது
அழிக்கப்படும் தேசத்தில் பிறந்த
ஏதும் அறியாத பாலகர்களைக் கொன்று                      
இரத்தத்தை உறிஞ்சிப் பருகும்   போர்ப்படைகள்
பூமியின் கடைசிப் பாலகனின்
நெஞ்சில் துப்பாக்கிகளால் துளைகளையிட்டு
இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பொழுது
எல்லாக் குழந்தைகளும் நிலத்தில் வீழ்ந்து கிடந்தனர்.

2012 மார்ச்

தீபச்செல்வன்
நன்றி - உலகத் தமிழ்ச் செய்திகள்

வெள்ளி, 9 மார்ச், 2012

கண்ணீர் யுகத்தின் தாய்


குழந்தைகள் அலைய
பூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது
ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள்

பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியது

தாய்மாருக்காய் அழுதழுது
கண்ணீர் விடும்
குழந்தைகள் வாழும் யுகத்தில்
கனத்தன வீடுகள்
குழந்தைகளுக்காய் அழுதழுது
கண்ணீர் விடும்
தாய்மார்கள் வாழும் யுகத்தில்
கனமடைகிறது பூமி

தாய் கட்டிய சுவர்களில்
கனவின் காட்சிகள் நெளிந்தன
நிலம் மெழுகும் தாயின்
விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள்
தொலை தூரத்தில் தவித்தன

அடுப்பில் பொங்கியது துயரம்

இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க
இலட்சம் தாய்மார் குழந்தைகளை இழந்தனர்
தாய்மார்கள் குழந்தைகளாகி
அழும் யுகத்தை சபித்தது யார்?

ஏங்கும் விழிகளை
துடிக்கும் வார்த்தைகளை
கண்ணீர் படிந்த முகங்களை
துயரேடிருக்கும் காலத்தை
தாய்மார்களுக்கு வழங்குவது யார்?
0

தீபச்செல்வன்

நன்றி : கணையாழி - மார்ச் 2011, செல்வா அம்மா நினைவு மலர்

வியாழன், 16 பிப்ரவரி, 2012

இடம்


நான் எப்பொழுதும் இல்லாதிருக்கிறேன்
பெருங்காட்டில் இடமின்றி
அலையும் விலங்காய்
பெரும் வான வெளியில்
இடமற்று அலையும் பறவையாய்
திசைகளின்மீது
வெளிகளின்மீதும் வீழ்க்கிறேன்
எனது பொருட்களெல்லாம் எறியப்பட்டன
சுவரின்றிக் கிடக்கும்
புகைப்படங்களில் அழியும்
நினைவுகள் பறக்கின்றன
தொல்பொருட்களைத் தொலைத்தேன்
எதையும் சேகரிக்கவில்லை
மாபெரும் இப்பூமியில்
எனக்கென்று ஒரு இடமற்று இருக்கிறேன்.

தீபச்செல்வன்

நன்றி : மல்லிகை ஆண்டு மலர் 2012

சனி, 28 ஜனவரி, 2012

பறவைகள் வீழ்ந்த நிலம்

தீபச்செல்வன்

நான் எதுவரை நிலம் பற்றியே பாடிக் கொண்டிருப்பேன்?
நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்படும்வரை
குழந்தைகளின் கைகளில் நிலத்தை 
உறுதியாய் பிடித்து வைத்திருக்கும்வரை
நான் நிலம் பற்றி பாடிக் கொண்டிருப்பேன்
பறவைகளின் காட்டில் குழந்தைகள்
நிலத்தின் வார்த்தைகளை ஒளித்து வைத்திருந்தனர்.

இன்று அந்த நிலத்தில் பறவைகள்
துடித்து விழ அந்நியக் குடிகள்
நிலமூன்றிக் கொண்டன
வெட்டிக் காயப்படுத்தப்பட்டு
நலிந்த மரங்களில் இன்னும் ஏதேனும் பறவைகள்
தொங்கிக் கொண்டிருக்கின்றனவா 
என்று தேடும் குழந்தைகள் 
நிலம் அள்ளப்பட்ட அரசியல்க் குழிகளில் வீழ்கின்றனர்.

நிலத்திலிருந்து நாம் துரத்தப்படுகையில்
எல்லாப் பறவைகளும் வீழந்த
நிலத்தின் இருதயத்தைத் தின்னும்
அந்நியக் குடிகள் விழுங்கினர் கடல்வெளிகளை
பொறியாய் நுழைந்த
சிங்கங்கள் நிலத்தை வேட்டையாடின.

மணல்வெளியில் புதிதாய் பதியும்
கால்கள் எழுதும் கதைகளால் 
சிறுவன் குளத்து மீன்கள் துடித்திறந்தன
அந்நியப் பெயர்களால்
கொல்லப்பட்ட கிராமங்களில் 
புத்தரின் ஞானம் அமைதியைத் தின்கிறது.

எல்லாம் பட்டு வீழந்த பிறகும்
குழந்தைகள் நிலத்தின் பாடல்களை 
பாடிக் கொண்டிருக்கின்றனர்
குழந்தைகள் நிலத்தை இழந்ததை
நான் எப்படி பாடாமலிருக்க முடியும்?

நன்றி - புது எழுத்து மார்கழி 2011

புதன், 25 ஜனவரி, 2012

சிறுவர்கள் பீரங்கிகளை முறிப்பார்கள்

சிறுவர்களுக்கு எதிராக நிற்கின்றன
பீரங்கிகளும் துப்பாக்கிகளும் விமானங்களும்

துப்பாக்கிகள் என்ன செய்யப்போகின்றன?
ஒன்றில் அவை சோர்வடைந்து சரிந்து போகும்
அல்லது கூர்மையடைந்து முகங்களைக் கிழிக்கும்

நீதான் புரட்சியை ஆயுதமாக்குபடி நிர்பந்திக்கறாய்
எதிர்ப்பை கிளப்பும் களத்தை திறக்கிறாய்
புரட்சியையும் எதிர்ப்பையும் எப்படிக் கொல்வது?
சனங்களை அடக்கும்பொழுது
குருதியில் புரட்சி பெருக்கெடுக்கிறது

வாழ்வின் இனிய பாடலை
நாம் பாடிக் கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு
அந்நியப்படைகளே
எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்?
வாழ்வை மூடியிருக்கும்
உங்கள் அதிகார நிழலை
எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்?

முதியவர்கள் சோர்வடைந்து
முடங்கியபடி காலத்தை கடக்கும் பொழுது
சிறுவர்கள் வளர்ந்து
நீங்கள் கொண்டு வந்த துப்பாக்கிகளையும்
பீரங்கிகளையும் முறித்துப் போடுவார்கள்

இந்தத் நிலத்தின் எல்லாத் தலைமுறைகளும்
நீயே யுத்தத்தை கையளிக்கிறாய்

எங்கள் சிறுவர்கள்மீது
துப்பாக்கிகளை நீட்டும்பொழுதில்
நடுநடுங்கித் துடிப்பார்கள் மூதாதையர்கள்

எனினும் சிறுவர்களுக்கு எதிராக
பீரங்கியை இந்நிலத்திற்கு
நீங்கள் கொண்டு வரும்பொழுது
கிளர்ந் தெழும் எங்கள் சிறுவர்கள்
முறித்துப் போடுவார்கள் அதை.

தீபச்செல்வன்

நன்றி : புது எழுத்து மார்கழி 2011

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...